விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவின் பங்களிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறீலங்கா அரசின் யுத்தத்தில் இந்தியா திரைமறைவில் முக்கியமான பாத்திரத்தை வகித்தது என புதிதாக வெளியிடப்பட்ட நூலொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் ஆயுதம் ஏற்றப்பட்ட குறைந்தபட்சம் ஒரு டசின் கப்பல்களை கண்டுபிடித்து அழிப்பதற்கு இந்திய கடற்படை முக்கிய புலனாய்வுத் தகவல்களை வழங்கியதாக அந்நூலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதின் ஏ.கோகலே என்பவர் எழுதிய `சிறிலங்கா: போரில் இருந்து அமைதிக்கு` (சிறீலங்கா புறம் வார் ரூ பீஸ்) எனும் தலைப்பில் எழுதிய நூலிலேயே இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறீலங்காவின் யுத்தத்தின் கடைசிக்கட்டம் தொடர்பான செய்திகளை என்.டி.ரி.வி. தொலைக்காட்சி அலைவரிசைக்காக சேகரித்தவர் இவர். இது தொடர்பாக இந்தியாவின் ஐ.ஏ.என்.எஸ். செய்திச்சேவை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 'சிறீலங்காவிற்கு ஆயுதங்கள் எதுவும் வழங்கவில்லை என இந்தியா பகிரங்கமாக கூறியது. ஆனாலும் 2006ம் ஆண்டின் முற்பகுதியில் இந்தியா எம்.ஐ.17 உலங்குவானூர்திகள் ஐந்தை சிறீலங்கா விமானப்படைக்கு அன்பளிப்பாக வழங்கியது`` என கோக்லே எழுதியுள்ளார்.

'மேற்படி உலங்குவானூர்திகள் சிறீலங்கா விமானப்படையின் வர்ணம் பூசப்பட்டு பறக்கவேண்டும் என்பதே இந்தியாவின் ஒரேயரு நிபந்தனையாக இருந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தமிழ்நாட்டு பங்காளிகளான தி.மு.க. போன்றவற்றை வீணாக ஆத்திரமூட்டுவதை புதுடில்லி விரும்ப
வில்லை`` எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்திய கரையோர காவல்படை சுகன்யா ரக ரோந்துக் கலமொன்றை 2002ம் ஆண்டு சிறீலங்கா இராணுவத்திற்கு அன்பளிப்புச் செய்தது. புலிகளின் ஊடுருவல் எதிர்ப்பு பிரிவினால் இந்தியாவின் ஒரேயரு நிபந்தனை சுற்றிவளைக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் அவர்களை மீட்பதற்காக சிறீலங்கா விமானப்படை மேற்கொண்ட துணிகர நடவடிக்கைகளின்போது மேற்படி ரோந்துக்கலம் முக்கிய பங்காற்றியது. புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிராந்தியங்களின் உட்பகுதிகளிலிருந்து காயமடைந்த படையினரை மீட்டு வான்வழியாக அனுப்புவதற்கும் அக்கலம் உதவியது.

புலிகளின் 10ற்கு மேற்பட்ட 'மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களை` கண்டுபிடித்து அழித்ததில் இந்திய கடற்படையின் பங்களிப்பு பற்றி சிறீலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னகொட குறிப்பிட்டதை மேற்படி நூலாசிரியர் மேற்கோள் காட்டியுள்ளார்.

நூலாசிரியர் தனது நூலில் இந்திய மற்றும் சிறீலங்கா கடற்படை வட்டாரங்களை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளதன்படி 2006ம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இரு நாடுகளின் கடற்படைகளினதும் சிறந்த கூட்டு நடவடிக்கைகளின் காரணமாக கடற்புலிகளின் முதுகெலும்பை முறித்தது. புலனாய்வுத் தகவல் பரிமாற் றமும் முக்கியமானதாக இருந்தது. தமிழ்நாட்டின் இராமநாதபுரத்தை தளமாகக்கொண்டிருந்த, சக்தி
வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்ட, இந்திய கடற்படையின் வான்கலங்கள் அடிக்கடி இலங்கையைச் சுற்றிய கடற்பரப்பின் மீது கண்காணிப்புப் பயணங்களை மேற்கொண்டன.

'எப்போதேனும் சந்தேகத்திற்கிடமான கப்பல் கண்டுபிடிக்கப்பட்டால் இந்திய கடற்படை சிறீலங்காவிற்கு தகவல் வழங்கும். உடனனுக்குடனான இந்த புலனாய்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதத் தொகுதிகளை கண்டுபிடித்து அழிப்பதற்கு உதவியது`` என கோக்ஹலே கூறுகிறார்.

இதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் சிறீலங்காவுக்கு இந்தியா வழங்கிய உதவிகள் தொடர்பாக ஊடகவியலாளர் நிதின் ஏ.கோ
கலே தனது நூலில் தெரிவித்திருந்த தகவல்கள் சிலவற்றை சிறீலங்கா மறுத்துள்ளது. அதேசமயம், சிறீலங்காப் படையினருக்கு இந்தியா வழங்கிய எல்லாவிதமான உதவிகளும் சுய பாதுகாப்பு (Self-Defensive) நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டன என இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியா எம்ஐ-17 ரக உலங்குவானூர்திகள் ஐந்தை அன்பளிப்பாக வழங்கியது என்று அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து முற்றிலும் பொய்யானது என பாதுகாப்புத் தரப்பு அதிகாரி தெரிவித்தார். நிதின் கோகலே தெரிவித்திருப்பவை ஆதாரம் ஏதுமற்றவை என்றார் அவர். இதுபற்றி கருத்துத் தெரிவித்த இந்திய பாதுகாப்புக்கான இராஜீய அமைச்சர் எம்.எம்.பள்ளம் ராஜ?, 'சுய பாதுகாப்புக்கானதாக மட்டுமே அது இருக்கும். அதற்கு மேல் ஒன்றும் இல்லை' என்றார். சிறீலங்காவின் சுய பாதுகாப்புக்கான உதவிகளை மட்டும் வழங்குவது என்ற கொள்கையில் இந்தியா மிகத் தெளிவாக இருந்தது. குறிப்பாக அங்கு இயல்பு நிலை திரும்புவதற்காக' என்றார். அது பற்றி விரிவாக அவர் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செயற்பட்ட சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணிகளின் உறுப்பினர்கள் காயம்பட்டபோது வான் வழியே அவர்கள் தப்பிச் செல்வதற்கு இந்தியா வழங்கிய ஆழம் குறைந்த கடலிலும் பயணிக்கக்கூடிய சுற்றுக்காவல் கப்பல் உதவியது என கோகலே தனது புத்தகத்தில் தெரிவித்திருந்தார். சிறீலங்கா தரைப்படையினர் இந்தத் தகவலை மறுத்துள்ளனர். அவ்வாறான மீட்பு நடவடிக்கைகள் வான்படையின் பெல்-212ரக மற்றும் எம்ஐ-24 ரக உலங்குவானூர்திகளின் துணையுடனேயே மேற்கொள்ளப்பட்டன என்றும் கடற்படையின் பங்கு எதுவும் அதில் இல்லை என்றும் தரைப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

-இந்திய செய்தியாளர்

ஈழமுரசு

0 comments:

Post a Comment