இலங்கை மீது ஒபாமா நிர்வாகம் அதிருப்தி - பிளேக்
இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் விடயம், இனப்பிரச்சனை, ஊடக சுதந்திரம் என்பவை குறித்து ஒபாமா நிர்வாகம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களை இன்னமும் மீள்குடியேற்றாமல் தடுத்து வைத்திருப்பது, இனப்பிரச்சனைக்கான தீர்வு, மற்றும் ஊடக சுதந்திரம் என்பவை குறித்து ஒபாமா நிர்வாகம் அதிருப்தி கொண்டுள்ளதாக தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகார அமெரிக்க துணைச் செயலாளர் ரொபேர்ட் பிளேக் கூறியுள்ளார். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சார்பான அரசியல் தீர்வு குறித்து இலங்கை அரசு மிக சொற்பமான நடவடிக்கைகளையே எடுத்துள்ளது. ஜனாதிபதி என்ற ஒரு கடனுக்காக கடந்த திங்கட்கிழமை செப்ரம்பர் 6 ஆம் திகதி, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சந்திப்பை மேற்கொண்டார்.
ஆனால், நாட்டை ஒருமுகப்படுத்தவும், நீண்ட காலப் போரால் ஏற்பட்டுள்ள காயங்களை ஆற்றத் தொடங்குவதற்கும் இன்னும் நிறைய செயற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளன. இலங்கை மக்கள் அனைவருக்கும் சமமான உரிமைகள், வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய ஒரு வழியில் அந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என பிளேக மேலும் தொடர்ந்து கூறியுள்ளார்.
மேற்குறித்த கருத்துகள், வோஷிங்டன், ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக மேம்பட்ட சர்வதேச கல்வி பாடசாலையில் 'ஒபாமாவின் தெற்காசிய கொள்கை' பற்றி கடந்த புதன்கிழமை, செப்ரம்பர் 9 அன்று கொடுத்த உரையிலேயே குறிப்பிட்டுள்ளார். இதில் பல கல்விமான்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. சிரேஷ்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையானது இலங்கையில் ஊடக சுதந்திரத்துக்குள்ள பயமுறுத்தல்கள் பற்றிக் காண்பிப்பதாகவும் அது தம்மைக் கவலை கொள்ள வைத்துள்ளதாகவும் மேலும் தொடர்ந்து கூறினார். ஊடக சுதந்திரம் இல்லாமல் ஒன்றுபட்ட இலங்கையை கட்டி எழுப்புவது என்பது சாத்தியமற்றது எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.