தமிழினத்தின் ஒற்றுமை வலுப்பெற வரும் ஊடக இல்லம்
இன்று இனம் மிகப் பெரிய நெருக்கடியிலும் எதிரிகளின் முற்றுகையிலும் சிக்கித் தவிக்கிறது.
தாயக விடுதலைக்குப் போரிட்ட எம் தமிழ்ச் சொந்தங்கள் சொல்லொணாத் துயரத்திலும் இருக்கின்றனர். தாய்த் தமிழ்ச் சொந்தங்கள் தங்கள் தாய் நாட்டிலேயே சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் முள்வேலிக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அவலம்.
ஆனாலும் இன்னும் உலகின் கவனம் நம் மீது திரும்ப மறுக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஊடகங்களின் செயலற்ற போக்குத்தான். ஊடகங்கள் விருப்பு வெறுப்பற்றும் துணிச்சலாகவும் உண்மைநிலையை உலகுக்கு எடுத்துச் சென்றிருந்தால் இன்று இந்த இழிநிலை ஏற்பட்டிருக்காது. தாயக விடுதலையில் ஊடகங்கள் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பது புலனாகும் .
அதற்கு ஈழமுரசு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இனம் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கும் பொழுது எத்தனையோ ஊடகங்கள் பாதை தவறிய பொழுதும் தொடர்ச்சியாக இனத்தின் விடுதலை குறித்து கொண்ட இலட்சியத்தில் மாறாது அது பயணிக்கிறது. ஈழமுரசு போன்ற நிறைய இதழ்கள் உருவானால் தான் இந்த குருட்டு உலகின் கண்கள் திறக்கும்.
நம் இனமும் விரைவில் விடுதலை அடையும். அத்தகைய நிகழ்வுக்கு நம்மை இட்டுச் செல்லும் நோக்கில் புதிதாகத் துவங்கும் ‘ஊடக இல்லம்’ முக்கிய பங்கினை ஆற்றும் என்று கருதுகிறேன.
ஆகவே எதிர்வரும் 2 ஆம் திகதி பிரான்சில் துவங்க இருக்கும் ஊடக இல்லம் சிறப்பாக செயல் படவும், நம் இன விடுதலையில் முக்கிய பங்காற்றவும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்பன்,
சீமான்,
நாம் தமிழர் இயக்கம்.
ஊடக சுதந்திரத்தின் ஊற்றுக் கண்ணாக வேண்டும்
அறிவியல்துறை வளர்ச்சியில், ஊடகப் பங்காற்றல் குறித்தான அக்கறை பெரும் பங்கு வகிக்கிறது. சமூகப் பிரக்ஞை, விழிப்புணர்வில் பதிவாகி, இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களினுடு மக்களிடம் சென்றடைகிறது.தேடல்களின் பொது மையமாக, ஊடகங்கள் மாறவேண்டுமென்கிற கருத்து நிலையயான்றும் உண்டு.சிந்தனை முறைமைகளின் வளர்ச்சி நிலை விரிவடைந்து, பல தளங்களை பரப்பிச் சென்றாலும், அவையாவும் சமூக வாழ்வின் முற்போக்கான வாழ்நிலைகளை இனங்காட்டும் திசையறிகருவிகளாக இருத்தலே சிறப்பானதாகவிருக்கும்.
அத்தகைய சமூக அக்கறை கொண்ட ஊடகத் தளங்கள் உருவாக்கப்படவேண்டுமென்கிற உந்துதல், இந்த "ஊடக இல்ல' உருவாக்கிகளுக்கும் இருக்கவேண்டுமென்பதே பரந்துபட்ட பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
"கருத்துக் கூறுதல்' என்கிற விமர்சனப் போக்கு, வாழ்வின் அசைவியக்கப் படிநிலைகளில் ஒளிந்திருக்கும் அறஞ்சார்ந்த பண்புருவங்களை வெளிக்கொணரும் வீச்சினை உள்ளடக்குவதோடு "எதிர்த்துக் கூறுதல்' என்கிற குறுகிய வட்டத்துள் வீழ்ந்து விடாது ஆரோக்கியமிக்கதாகப் பயணிக்க வேண்டும்.
புலம் பெயர் தமிழ் ஊடகப் பரப்பு, மிகவும் இக்கட்டானதொரு காலகட்டத்தைக் கடந்து செல்லும் இவ்வேளையில், ஊடக இல்லத்தின் இலக்கும், செயற்பாடுகளும், மக்களின் அறிவியல் சார்ந்த தேடல்களுக்கு, காத்திரமானதொரு சிந்தனைக் களமாக அமைவது நன்று.
கண்ணிற்குப் புலப்படாத, ஒளி மிகுந்த முற்போக்குச் சிந்தனைகள் நிறைந்து காணப்படும் மறைவிடங்களைத் தேடிச் செல்லும் வாசகர்களை, அவர்களின் கரம்பிடித்து, அழைத்துச் செல்லும் உன்னத பணியை, இந்த "ஊடக இல்லம்' நிறைவேற்றுமென்று நம்புவோம்.
பயணிக்கும் இலக்கு ஒன்றாக இருந்தாலும், அதை நோக்கி நகரும் சமாந்தரமான மாற்றுச் சிந்தனைக் கோடுகளையும் உள்வாங்கி, சமூக விடுதலை விரும்பிகளின் கருத்தாடல்களுக்கும் இந்த இல்லத்தில் இடம் தர வேண்டும்.
எமது சமூக கலை, கலாச்சார பண்பாட்டுத் தளத்தில் இன்னமும் ஓட்டிக்கொண்டிருக்கும் பிற்போக்குத் தனங்களை அறுத்தெறிந்து, இனத்தின் நிமிர்வில்மானுடத்தின் உன்னதங்கள் ஒளிவீசிடச் செய்ய வேண்டும்.
அதற்கான பணியினை நேர்த்தியாகச் செய்திடும் வல்லமையை, ஊடக இல்ல நிர்வாகிகள் பெறுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.
- இதயச்சந்திரன்
தமிழினத்தின் ஒற்றுமை வலுப்பெற வரும் ஊடக இல்லம்
குட்டை குழப்பியதால், இனத்தை பலி கொடுத்த வரலாறு தமிழனுக்கு மட்டுமே பொறுந்தும். இராஜதந்திரம் என்ற பெயரில், ஈழத்து மக்களை குழப்பி, புலம் பெயர்ந்த தமிழினத்தை வேதனையை உலக நாடுகளுக்கு தெரியாவண்ணம் மறைத்து, தமிழக தமிழர்களை பிரித்தாண்டு, இறுதியில் ஒரு விடுதலை போராட்டத்தையே நசுக்கி விட்டதாய் இன்று கொக்கரித்து கொண்டிருக்கிறது சிங்களம்.
எதிரிகளின் சூட்சமத்தை அறியாமல், தெளிந்த நீராய் இருந்து கொண்டு, இன்று வேதனைத் தீயில் தமிழினம் தன்னைத் தானே வருத்திக் கொண்டிருக்கிறது. எதிரியின் சூட்சமங்களை வேரறுத்து, வேதனையில் இருக்கும் எம்மக்களின் துயர் துடைத்து, இனி எமக்காக பிறந்தோம், புதிதாய் பிறந்தோம், எம்மினத்திதை மறைத்த கருமேகங்களை உடைத்தெறிவோம், உண்மையை உணர்த்துவோம் என நமக்கு நம்பிக்கை நட்சத்திரமாய் புலத்திலிருந்து ஒரு சூரியன் புறப்படுகிறது,
செப்டம்பர் 2ம் தேதி ஊடக இல்லம். ஊடகத்தின் வாயிலாய் உண்மையின் உறைவிடமாய், ஊருக்கு ஒளி விளக்காய் எம்மினம் காக்க, குழப்பிய குட்டையின் அழுக்குகளைகளை, களையயடுக்க, தமிழினத்தின் ஒற்றுமை வலுப்பெற வரும் ஊடக இல்லத்தை நாம் இருகரம் கூப்பி வருக வருக என வாழ்த்துகிறோம்.
அக்னி சுப்ரமணியம்
தலைவர், தமிழ்ச் செய்தி மையம்
www.tamilnewscenter.com