மாக்ஸ் & ஸ்பென்சர் ((Marks & Spensor) நிறுவனம் இலங்கைக்குச் சார்பாக பரிந்துரை
இலங்கையில் மனித உரிமை மேம்படவேண்டும் அதற்கான அழுத்தத்தை கொடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி சலுகையில் சிலவற்றை ரத்துச் செய்யவுள்ளது. நாளை நடைபெற இருக்கும் இது குறித்த மாநாட்டில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னர் ஜி.எஸ்.பி சலுகையை நீடித்திருந்த ஐரோப்பிய ஒன்றியம் தற்போது சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான படுகொலைக் காட்சிகளை அடுத்தும், மற்றும் தடுப்பு முகாம்களின் நிலை குறித்தும் பெரும் அதிருப்தி அடைந்துள்ளது.
இந் நிலையில் பிரித்தானியாவில் இயங்கும் ஆடை நிறுவனமான மாக்ஸ் & ஸ்பெசர் நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தொழிலாளர் நிறுவனம் ஒன்றினூடாக கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது. அதில் இலங்கையில் உள்ள 2 லட்சத்தி ஐம்பதாயிரம் பேர் இதனால் நேரடியாகப் பாதிக்கப்படுவர் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் பலர் இந்த மாக்ஸ் & ஸ்பென்சரில் ஆடைகளை வாங்குவது உண்டு, எமது பணத்தைப் பெறும் இந்த நிறுவனம் தமிழர்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவது வருந்தத்தக்கது.
குறிப்பாக இலங்கையில் என்ன நடக்கிறது என்று பிரித்தானியாவில் ஒரு சிறு பிள்ளையைக் கேட்டாலே தெரியும். இந் நிலையில் தனது சொந்த நலனைக் கருத்தில் கொண்டு, இந்த நிறுவனம் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. நெக்ஸ்ட் Next மற்றும் Marks & Spensor போன்ற நிறுவனங்கள் இலங்கையில் வைத்திருக்கும் ஆடை உற்பத்தி நிலையங்கள் முழுவதும் தெற்கில் இருப்பதும், இதில் வேலைசெய்வோர் 90% விதமானோர் சிங்களவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரித்தானியா வாழ் தமிழர்கள் இதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்?