வவுனியா முகாமில் மக்களுக்கும் இராணுவத்திற்குமிடையில் மோதல்


வவுனியா பூந்தோட்ட கல்வியல் கல்லூரி இடம்பெயர் முகாமில் உள்ள மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில்
முறுகல் நிலை ஏற்பட்டது. இம் முறுகல் நிலை மோசமாகி கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் பலியானதுடன் பலர் காயத்திற்குள்ளாகினார்.

கிளிநொச்சி கனகபுரத்தைச் சேர்ந்த இவர் ஒரு கூலித்தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், வவுனியா பூந்தோட்ட கல்வியல் கல்லூரி முகாமை அண்டியுள்ள மக்களும் இடம்பெயர் மக்களோடு ஒன்றுதிரண்டு மோதியதனால், இராணுவம் மக்கள்மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அங்கு பதற்றநிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்படடடுள்ளது.

(பிந்திய செய்தி)
விசாரணைக்கு அழைத்துச் சென்றவரைக் காட்டுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்


வவுனியா பூந்தோட்டம் கல்வியியல் கல்லூரி இடைத்தங்கல் முகாமில் இருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவரைக் காணாத நிலையில் எழுந்த வதந்தியையடுத்து, அவரைக் காட்டுமாறு கோரி அந்த முகாமைச் சேர்ந்த மக்கள் புதனன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தோட்டம் கல்வியியல் கல்லூரி வளவின் ஒரு பகுதியில் இந்த முகாம் அமைந்துள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து கல்லூரியின் பிரதான நுழைவாயிலில் நின்று ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்டிருந்தனர். 





இது குறித்து தமிழ்க் கூட்டமைப்பு அரச உயர் மட்டத்துடனும் வவுனியா அரச அதிபருடனும் தொடர்பு கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக வெளிவந்த தகவலை அடுத்து முகாமில் பதட்டம் நிலவியதாகவும் எனினும் படையினரால் தாக்கப்பட்ட நடுத்தரவயதான ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலை அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை உறுதிப்படுத்துமாறு அரசாங்க அதிபரிடம் தமிழ்க் கூட்டமைப்பு கோரியுள்ளது.


இந்த முகாமைச் சேர்ந்த பரமசாமி சந்திரமோகன் (31) என்பவரையே இவ்வாறு கொண்டு வந்து காட்டுமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகச் சம்பவ இடத்திற்குச் சென்று ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சமாதான பேச்சுக்களில் ஈடுபட்ட ஈபிடிபி கட்சியின் வவுனியா மாவட்டப் பொறுப்பாளர் சிவன் சிவகுமார் (ரகு) தெரிவித்தார்.

தகவ அறிந்த வவுனியா பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் சமாதான பேச்சுக்களில் ஈடுபட்டனர். அழைத்துச் செல்லப்பட்டவரைக் கொண்டு வந்து காட்டுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சம்பந்தப்பட்ட நபரைப் பொலிசார் அழைத்து வந்து காட்டினர். அதன்பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாகக் கலைந்து சென்றதாகவும் சிவன் சிவகுமார் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து மேலதிக இராணுவத்தினரும் பொலிசாரும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். எனினும் அசம்பாவிதங்கள் எதுவுமின்றி நிலைமை சுமுகமானதாகத் தெரிவிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment