உலகத் தமிழர் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கை
தமிழரை உலகத் தமிழர் பேரவையின் (உ.த.பே.) முதலாவது மாநாட்டிற்கு ஐந்து கண்டங்களிலிருந்து புலம்பெயர் தமிழரின் பேராளர் ஆகத்து 29 தொடக்கம் 31 வரையான நாட்களில் பிரான்சிலுள்ள பரிஸ் நகரில் ஒன்று கூடினர்.
சிறீ லங்காவில் தமிழரின் பேரவல நிலை பற்றிக் கலந்துரையாடியதோடு அவர்களின் உடனடித் தேவைகளைக் கவனிப்பதற்கான செயல் திட்டங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
மூன்று நாட்கள் நடந்த இம்மாநாட்டில் பேரவையின் யாப்பு எல்லா நாட்டுப் பேராளர்களாலும் ஒருமனதாக எற்றுக்கொள்ளப்பட்டது.
முனைவர் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்கள் பேரவையின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களை ஒன்று திரட்டுவதும் அதேவேளை அனைத்துலகக் சமூகத்துடன்
இணைந்து செயலாற்றி இலங்கைத் தீவின் வடக்கிலுள்ள தடுப்பு முகாம்களில் தம் விருப்புக்கு மாறாக சிறை வைக்கப்பட்டுள்ள 300,000 தமிழர்களையும் வெளிக் கொணர்தலுமே உலகத் தமிழர் பேரவையின்
உடனடிக் குறிக்கோள்களாகும். போர்க் குற்றம் புரிந்தவர்களையும் மானிடத்துக்கு எதிரான குற்றம் இழைத்தவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த பேரவை முனைப்போடு செயலாற்றும்.
'இடநெருக்கடிமிக்க தடுப்பு முகாம்களில் தொற்று நோய்களினால் பெருந் தொகையில் மக்கள் இறப்பதோடு உணவுப் பற்றாமையால் பிள்ளைகள் பெரும் இன்னலுறுகின்றனர். முகாம்களுள் அடைத்து
வைக்கப் பட்டுள்ளோர் சித்திரவதைஇ பாலியல் வன்முறைஇ காணாமற் போதல் இ சட்டத்துக்குப் புறம்பான கொலை முதலிய பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். அதேவேளை
ஆட்கடத்தல்இ சித்திரவதைஇ கொலை முதலியவற்றை தாங்களும் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்ற பயத்தால் சிறைப்படுத்தப்பட்ட தமிழருக்காகப் பேச முடியாது முகாம்களுக்கு வெளியேயுள்ள தமிழர் வாய் மூடியவர்களாக உள்ளனர்' என அவுஸ்திரேலியப் பேராளர் ஒருவர் எடுத்துரைத்தார்.' இந்தப் பாரிய மனித அவலத்தினை எதிர்கொள்ள 2004ஆம் ஆண்டின் ஆழிப் பேரலையின் போது முன்னெடுக்கப்பட்டது போன்ற அனைத்துலக உதவி அமைப்புக்களினதும் உள்ளூர் உதவி அமைப்புகளினதும் பெருமளவிலான ஒன்றிணைக்கப்பட்ட நடவடிக்கை அவசியம். ஆனால் சிறீ லங்கா அரசு அனைத்துலக மனிதாபிமான சட்டங்களை மீறி உதவி அமைப்புகளையும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தையும் தடுப்பு முகாம்களுட் சென்று உதவி வழங்க அனுமதி மறுத்து வருகின்றது.
தான் புரிந்த போர்க் குற்றங்கள் பற்றிய உண்மை வெளிவந்துவிடும் என்ற பயத்தினால் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஊடகவியலாளருக்கும் கூட சிறீ லங்கா அரசு உட்செல்ல அனுமதி மறுத்து வருகின்றது. எமது மக்களைப் பாதுகாக்க உலகளாவிய தமிழர் அனைவரும் தமது ஒன்றிணைந்த முழுப் பலமனைத்தையும் திரட்டிச் செயற்பட வேண்டிய அவசியத்தை இந்நிலை உணர்த்தியுள்ளது' என சேர்மனியில் இருந்து வந்த பேராளர் ஒருவர் கூறினார். மக்களாட்சி வன்முறை தவிர்ந்த வழி என்ற கோட்பாடுகட்கமைய ஒழுகும் உலகத் தமிழர் பேரவையானது வௌவேறு துறைகளிலுள்ள புலம்பெயர்ந்த தமிழர் அனைவரையும் அவரவர் நாடுகளிலுள்ள நாட்டு அமைப்புகளின் கீழ் ஒன்று திரட்ட ஆவன செய்யும். மேலும் உலகத் தமிழர் பேரவையானது அதன் இலக்குகளை அடைவதற்கு சிறீ லங்காவிலுள்ள எல்லாச் சமூகங்களோடும் அனைத்துலகக் சமூகத்தோடும் ஒன்றுசேர்ந்து செயற்பட முயற்சி மேற்கொள்ளும்.