இடம்பெயர்ந்த மக்களுக்கான மேலதிக உணவுப் பொருட்கள் செப்.15 வரையே கையிருப்பில் உள்ளது

வவுனியா முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்காக வழங்கப்படும் மேலதிக அத்தியாவசிய உணவு விநியோகத்தை செப்டம்பர் 15ம் திகதியளவில் முழுமையாக நிறுத்த நேரிடும் என தனது பெயரை வெளியிட விரும்பாத ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

குறித்த காலத்தின் பின்னர் வவுனியா முகாம் சூழலில் உள்ள கடைகளிலேயே இடம்பெயர்ந்த மக்கள் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்ய நேரிடும் எனவும், உணவுகளைக் கொள்வனவு செய்யும் வசதியை முகாம்களில் உள்ள மக்களில் 5இல் ஒரு பகுதியினரே பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஒருமாத காலமாக இந்த உலர் உணவுப் பொருட்களின் விநியோகம் சீராக நடைபெறவில்லை எனவும், இனிவரும் நாட்களில் எதிர்கொள்ளவுள்ள நிலைமையினால், முகாம்களில் போசனைக் குறைபாடு மேலும் மோசமடையக் கூடும் எனவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய இதுவரை மக்கள் மீளக்குடியமரத்தப்படாததன் காரணமாக, உயிர் காக்கும் அவசர பணிகளுக்கான உதவிகளைத் தவிர ஏனைய உதவிகளை தொண்டு அமைப்புகள் நிறுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபினப் பணிகள் அலுவலகத்தின் இலங்கைக்கான பிரதிநிதி இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்த உணவு நெருக்கடி குறித்து கலந்துரையாடுவதற்கு, செப்டம்பர் 11ம் திகதி உலக உணவுத் திட்டம், கிரிடாஸ் நிறுவனம், மனிதாபிமான அமைப்புக்கள் கூட்டமைப்பு ஆகியன கூடவுள்ளதாக மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டிணைப்புத் தலைவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment