வவுனியா முகாம்களில் ஒரு லட்சம் பேரின் உயிருக்கு ஆபத்து

செப்டம்பர் மாதத்தின் பின்னர் ஏற்படும் கடும் மழையுடன் கூடிய பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக இடம்பெயர்ந்தோர்

முகாம்களில் தங்கியுள்ள சுமார் ஒரு லட்சம் பேரின் உயிருக்கு ஆபத்து அல்லது கடும் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாக முகாம்களில் பணியாற்றி வரும் 17 அரசசார்பற்ற நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை பிரதானிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளன.

கெயார் இண்டர்நே~னல், டென்மார்க் அகதிகளுக்கான பேரவை, ஃபோரூட், ஒக்ஸ்பார்ம் அவுஸ்திரேலியா, வேர்ல்ட் வின் லங்கா, ஒக்ஸ்பார்ம் பிரித்தானியா, சேவ் த சில்ரன் உள்ளிட்ட அமைப்புகள் இதில் அடங்குகின்றன. இந்த நிலைமையை தவிர்க்க வேண்டுமாயின் குறைந்தது ஒரு லட்சம் மக்களை முகாம்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் இவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.

அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்து வரும் கூடராங்களும் தற்காலிக கூடாரங்களும் பெருமளவில் அழிவடைந்துள்ளதுடன் காணாமல் போயுள்ளன.

இந்த நிலையில் எதிர்வரும் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் இந்த நிலைமையானது மேலும் மோசமடையும் என அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த நிலைமை காரணமாக தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் முகாம் பகுதிகளில் அதிகளவில் பரவியுள்ளதுடன், சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

குடிநீரிலும் குளிக்கும் தண்ணீரிலும் கழிவு நீர் கலந்துள்ளது. அவற்றை சுத்திகரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், நீர் விநியோகத்தை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம் எனவும் அரசசார்பற்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனை தவிர மழைக்;காலத்தில் பின்னர், முகாமுக்கு செல்லும் வீதிகள் வெள்ளத்தினால் மூழ்குமெனில் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க முடியாமல் போகலாம்.

இதனால் ஆயிரக்கணக்கான உயிர்கள் ஆபத்தை எதிர்நோக்க நேரிடும் எனவும் வவுனியாவில் உள்ள முகாம்களில் நிவாரப் பணிகளில் ஈடுபட்ட நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கைக்கான பிரதான அதிகாரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளன.

0 comments:

Post a Comment