அரசாங்கத்தை விமர்ச்சிக்க லக்பிம நாளிதழ் ஆசிரியர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது
அரசாங்கத்திற்கு எதிராக கட்டுரைகளை எழுத தடை விதித்து, சுமதி பத்திரிகை நிறுவனம் அமுல்படுத்திவந்த உள்ளகத் தடையை நீக்க அதன் நிர்வாகம் கடந்த முதலாம் திகதி தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்தை விமர்சிக்கும் கட்டுரைகளையும், செய்திகளையும் வெளியிட லக்பிம நாளிதழ், மற்றும் வார இறுதி பத்திரிகை ஆசிரியர்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதாக லக்பிம நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
வீழ்ச்சியடைந்துள்ள பத்திரிகை விற்பனை உயர்த்துவதற்காக இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகக் கூறப்பட்ட போதிலும், சுமதி பத்திரிகை நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், மேல் மாகாண சபையின் உறுப்பினருமான திலங்க சுமதிபால ஜனாதிபதியினால் தொடர்ந்தும் ஓரம்கட்டப்பட்டு வருவதாலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பத்திரிகை விற்பனையானது நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதால், சுமதி பத்திரிகை நிறுவனம் பாரிய நிதி நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது.
கடந்த சில மாதங்களில் உரிய தினத்தில் பத்திரிகையின் பணியாளர்களுக்கு மாதாந்த கொடுப்பனவுகளை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.